Tuesday, August 18, 2009

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

திருவாரூர், ஆக. 17: தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ்மன்றம் சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆக. 21-ல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும். போட்டிகளுக்கான தலைப்பு தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் குறித்த வகையில் அமையும். ஒரு கல்லூரியிலிருந்து ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் அனுப்ப வேண்டும். ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஆனால் ஒரே மாணவர் அனைத்துப் போட்டியிலும் பங்கு பெறலாம். அதற்கேற்றவாறு நேரம் ஒதுக்கித் தரப்படும்.

போட்டிகளின் முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் சென்னையில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குநரை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment